பினாங்கு, ஜூன் 04-
பினாங்கு, கேபாலா பாத்தாஸ், பெர்டாம், நீர் விளையாட்டுப் பூங்காவில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட ஐந்து வயது சிறுமி, நீரில் மூழ்கி பரிதாபமாக மாண்டார்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் குடும்ப உறுப்பினர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருந்த தனது மகள், தனது நேரடிப் பார்வையிலிருந்து திடீரென்று காணாமல் போனதாக அந்த அந்த சிறுமியின் தாயார் தெரிவித்ததாக செபராங் பெராய் உத்தாரா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுல்கிஃப்லீ சுலைமான் தெரிவித்தார்.
நீரில் விளையாடிக்கொண்டு இருந்த தனது மகள் காணாமல் போனது குறித்து அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் உள்ள பணியாளர்களிடம் அந்த மாது தெரிவித்து இருக்கிறார்.
அந்த ஐந்து வயது சிறுமியை தேடும் பணி துரித வேகத்தில் முடுக்கி விட்ட நிலையில் சிறிது நேரம் கழித்து, அந்த சிறுமியின் உடல், அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் இன்னும் கட்டுமானத்தில் இருந்து வரும் ஒரு குளத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக சுல்கிஃப்லீ சுலைமான் குறிப்பிட்டார்.
பின்னர் அந்த சிறுமியின் உடல் நீரின் மட்டத்தில் சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்கப்பட்டது. சவப்பரிசோனைக்காக அந்த சிறுமியின் உடல் கேபாலா பாத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.








