மாணவர்களின் நலனைக் கண்காணிக்கவும், அவர்கள் மீதான துஷ்பிரயோக அறிகுறிகளைக் கண்டறியவும் பள்ளிகளில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மலேசியக் குழந்தைகள் பாதுகாப்பு மையமான சி.பி.எஸ்.எம் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஆதரவுச் சேவைகளுக்கும் இடையே ஒரு முக்கிய பாலமாகச் செயல்பட முடியும் என்று அவ்வமைப்பின் தலைவர் நாசிர் ஆரிஃப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள கார்கோசா ஸ்ரீ நெகாரா வளாகத்தில் நடைபெற்ற "பாதுகாப்பான குழந்தை, வலுவான தேசம்" என்ற பிரச்சாரத் தொடக்க விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார். குடும்ப மானம் மற்றும் அவமானம் கருதி, பல குடும்பங்கள் குழந்தைகள் மீதான அநீதிகளை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள். அதே நேரத்தில், வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியாகவோ அல்லது அண்டை வீட்டாரிடமோ விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், பள்ளிகளில் உள்ள இந்தத் தனித்துவமான ஆசிரியர்கள் மூலம் குழந்தைகளின் பாதிப்புகளை எளிதாகக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அனைத்து ஆசிரியர்களும் இந்தத் பொறுப்பிற்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதால், இதற்கெனத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நாசிர் ஆரிஃப் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் கடந்த 2022-இல் 477 ஆக இருந்த பாலியல் தொல்லை புகார்கள், கடந்த ஆண்டு 1,038 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 388 புகார்களைப் போலீஸார் பெற்றுள்ளதாக மகளிர், குடும்பம் , சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கடந்த வாரம் தெரிவித்திருந்த புள்ளிவிவரத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








