பள்ளியின் கட்டிடத்திலிருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவத்தில், எந்தவிதமான குற்றவியல் பின்னணியோ அல்லது பகடிவதை போன்ற செயல்களுக்கான கூறுகளோ கண்டறியப்படவில்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமத் தெரிவித்துள்ளார்.
உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே மாணவி உயிரிழந்துள்ளார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட 10 முதல் 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் இது குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் டத்தோ அல்சாஃப்னி கேட்டுக்கொண்டுள்ளார்.








