அண்மையில் ஜெட் எரிபொருள் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஏர்ஆசியா எக்ஸ் பெர்ஹாட் தனது விமானக் கட்டணங்களைப் படிப்படியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று கட்டணத்தை 5% குறைத்துள்ளதாகவும், எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப வாரந்தோறும் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் ஏர்ஆசியா ஏவியேஷன் குரூப் லிமிடெட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விலை உயர்ந்ததால் விமான நிறுவனத்திற்கு 150 மில்லியன் ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும், ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் 83% விமானங்கள் பயணிகளால் நிரம்பி, பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
செலவுகளைக் கட்டுப்படுத்த பழமையான 12 விமானங்கள் திரும்ப அனுப்பப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 7 புதிய எரிபொருள் திறன்மிக்க விமானங்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குறைக்கப்பட்ட விமானச் சேவைகள் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் என்றும், பஹ்ரைன் மற்றும் லண்டனுக்கான புதிய சேவைகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்றும் போ லிங்கம் குறிப்பிட்டுள்ளார்.








