கெடா, மே 29-
கெடா, தாமான் செரி கோத்தா கோலா மூடா, ஜாலான் பந்தாய் மெரேகா -வில் உள்ள நான்கு வீடுகள் சட்டென்று தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்து வெளியேறிய புகையினால் ஆறு வளர்ப்பு பூனைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன.
நேற்று மாலை 5.53 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட பூனைகளை காப்பாற்ற முற்பட்ட போதும் எந்தவொரு பயனுமின்றி அவை அனைத்துமே இறந்ததாக திக்காம் பாத்து, தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் முஹம்மது ஷுக்ரி ஹாஷிம் தெரிவித்தார்.
அச்சம்பவ இடத்தில் A பிரிவில் உள்ள நான்கு வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும், தீயில் சம்பந்தப்பட்ட வீடுகள் அனைத்தும் 10 முதல் 85 சதவீதம் வரையில் கறுகி நாசமானதாகவும் முஹம்மது ஷுக்ரி கூறினார்.
தீ ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.








