பி40 தரப்பு இந்தியர்களின் வாழ்வாதார உயர்வுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, இந்தியர்கள் அதிகம் வாழும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மித்ரா வழங்கிய நிதி முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டதோ முஹமாட் இஸாம் முஹமாட் இசா தெரிவித்தார்.
தமது தொகுதிக்கு கிடைக்கப்பெற்ற மித்ரா நிதியும் தம்பினில் உள்ள பி40 இந்திய மக்களுக்கு நேரடி பலன் கிட்டும் வகையில் முறையே திட்டமிடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மனித மூலதன மேம்பாடு, தொழில் முனைவர் - தொழில் மேம்பாடு, சமூக மேம்பாடு, ஆன்மீகம் மற்றும் இந்தியர்களின் நல்வாழ்வு ஆகிய முக்கிய திட்டங்களுக்காக அப்பணம் பயன்படுத்தப்பட்டதாக முஹமாட் இஸாம் சொன்னார்.
இவ்வேளையில் இந்நிதியை ஒதுக்கிய மித்ராவுக்கும் அதன் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவருமான டத்தோ ரமணனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
முன்னதாக, சனிக்கிழமையன்று இங்குள்ள டத்தாரான் அரேணாவில் நடைபெற்ற தீபாவளி நல்லெண்ண விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு தலையேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் 11 இந்து ஆலயங்கள், 7 பள்ளிகளுக்கு நிதிகள் வழங்கப்பட்டன. அதே வேளையில் 300க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு உதவிகளும் வழங்கப்பட்டது.








