தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் அந்நிய நாட்டு வியாபாரிகளின் வரவு, எக்ஸ்போ என்ற பெயரில் போடப்பட்டுள்ள தீபாவளி கார்னிவல் முதலியவற்றால் சிரம்பான் லிட்டில் இந்தியாவில் இந்திய வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சிரம்பான், ஜாலான் யம் துவான் லிட்டில் இந்தியாவிலிருந்து 5 நிமிட பயண தூரத்தில் தீபாவளி Carnival என்ற பெயரில் 140 கூடாரங்கள் போடப்பட்டுள்ள தீபாவளி சந்தையினால் காலாகாலமாக வியாபாரம் செய்து வந்த லிட்டில் இந்தியா விபாாரிகளுக்கு, இந்த தீபாவளி வர்த்தகம் பேரிடியாக அமைந்துள்ளது.
மக்கள் கூட்டத்தை காண முடியாத நிலைக்கு லிட்டில் இந்தியா வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
எக்ஸ்போ, கார்னிவல் என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை என்ற அளவில் தொடங்கப்பட்ட விற்பனை விழாக்கள், பின்னர் மாதத்திறகு ஒன்று என நிலைமை மாறி தற்போது சிரம்பானின் வாரக் கணக்கில் நடத்தப்பட்டு வருவது
உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது.
சிரம்பான் லிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு தீபாவளி காலகட்டத்திலும் திருவிழா போன்று இருந்த உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகத் தளங்கள், தீபாவளி கார்னிவல் போன்றவற்றினால் வாடிக்கையாளர்களின் நடமாட்டத்தை காண முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக சிரம்பான், ஜாலான் யாம் துவான், லிட்டில் இந்தியாவில் Attack Sweet’s இனிப்பு கடையை நடத்தி வரும் ரேவதி கூறுகிறார்.
கடையை வாடகைக்கு எடுத்து, ஆட்களை வேலைக்கு அமர்த்தி, எல்லா செலவினத்தையும் ஏற்றப் பின்னர் விபாபாரத்தில் கிடைக்கக்கூடிய வருமானத்தில் ஒரு பகுதிதான் ஆதாயம். ஆனால், அந்நிய நாட்டு வியாபாரிகள் நடத்தும் கார்னிவல் போன்றவற்றினால் தற்போது அந்த வருமானத்தைக்கூட பார்க்க முடியாத நெருக்கடியான நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக ரேவதி வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
இது குறித்து புகார் கூறினால் பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதும், அடுத்த நாளே மீண்டும் கடைகள் முளைப்பதும் வாடிக்கையாக உள்ளது. அந்நிய வியாபாரிகளின் வர்த்தகத்தை ஒடுக்க நிரந்தர தீர்வு தேவை என்பதே தங்களின் எதிர்பார்ப்பாகும் என்று ரேவதி கூறுகிறார்.








