Jun 11, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் நவ சக்தி ஆஞ்சநேயர் சன்னதியுடன் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் இனிதே நிறைவு

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகப் பெருவிழா, இன்று வியாழக்கிழமை காலை மங்கள இசை முழங்க, பக்திப் பெருக்குடன் வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 8.45 மணி முதல் 10.00 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில், வேத மந்திரங்கள் விண்ணதிர மகா குடமுழுக்கு நன்னீராட்டு விழா கண்கொள்ளாக் காட்சியாக அரங்கேறியது.

இப்புனித நன்னாளில், ஆலயத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், அனுஷ்லிங்கம் மற்றும் தமிழகத்தின் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வடிவங்களான அஷ்டலிங்கங்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், மலேசியாவிலேயே முதன்முறையாக ஒன்பது ஆஞ்சநேயர்களை உள்ளடக்கிய 'நவ சக்தி ஆஞ்சநேயர்' சன்னதி உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, ஆலயப் பொறுப்பாளர்கள் புனித கும்பங்களை பக்திப் பெருக்குடன் ஏந்திய வண்ணம் ஆலயம் வலம் வந்தனர்.

மகா கும்பாபிஷேகத்தின் முக்கிய வழிபாடான “கோ” பூஜையையொட்டி, ஆலயத்திற்குள் மங்களகரமாகப் பசுமாடு அழைத்து வரப்பட்டது."

அதனைத் தொடர்ந்து, மங்கள மேளதாள நாதஸ்வரம் முழங்க, திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் 'அரோகரா... அரோகரா...' என பக்திப் பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டனர். அந்த ஆன்மீகப் பெருவொலிக்கு இடையே, 'நவ சக்தி ஆஞ்சநேயர்' சன்னதி உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளின் சிலைகள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் சாஸ்திரோக்தமாக நிறைவேற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.

இந்த ஆன்மீகப் பெருவிழாவானது, தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்கயிலாய பரம்பரை, கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் மேலான ஆலோசனைகளின்படியும், தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையிலும் பக்திப் பரவசத்துடன் மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு வந்து 'பக்தர்களின் கடலாக' காட்சியளித்தனர். விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவரும் அண்ணாமலையானின் திவ்ய தரிசனம் கண்டு திருவருளையும், பரிவார மூர்த்திகளின் மகா ஆசிகளையும் பெற்று மகிழ்ந்தனர். அனைவருக்கும் தீர்த்தப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

Related News