Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆலயம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஆலயம் முழுமையாக சீரமைக்கப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது

Share:

மலேசியத் திருநாட்டில் தாய்க் கோயிலாகத் திகழும் ஒரு நூற்றாண்டு வரலாற்றைக்கொண்டிருக்கும் கோலாலம்பூர் ஜாலான் துன்.எச் எஸ் லீ யில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், வரும் ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழழை ஏழாவது மகா கும்பாபிஷேகத்தை காணவிருக்கிறது.
அன்றைய தினம் காலை 11.10 மணிக்கு மேல் பகல் 12.30 மணிக்குள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தங்க விமான, வெள்ளி பந்தன, அஷ்ட பந்தன, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெய்வமூர்த்திகளுக்கு அஷ்டபந்தம் சாத்த வேண்டும் என்பது ஆகம விதியாகும். அவ்வகையில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கும் வகையில் அன்னை ஸ்ரீ மகாமாரியம்மனின் தங்க விமான, வெள்ளி பந்தன அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தெரிவித்தார்.

ஸ்ரீ கணேசர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு வெள்ளி பந்தனமாக அமைக்கப்பட்டிருப்பதோடு, ஆலயத்தின் பழையத் தூண்கள் அகற்றப்பட்டு, தமிழகம் ராமேஸ்வர திருக்கோயில் தூண்களைப் போன்று மாற்றப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

விக்கிரங்கள் இருக்கக்கூடிய பீடங்கள், நவகிரக பீடங்கள் அனைத்தும் கருங்கற்காக மாற்றப்பட்டுள்ளன. பேச்சாயி அம்மன் சிலை, முன்பு வெறும் சிமெண்ட் வடிவில் காணப்பட்டது. தற்போது அந்த சிமெண்ட் அகற்றப்படாமல், அதற்கு முன்பு கருங்கல்லில் பேச்சாயி அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பழைய ஐம்பொன்னால் ஆன துர்க்கை அம்மன் சிலை அகற்றப்பட்டு கருகல்லில் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு மண்டபத்தில் வசந்த மண்டபம் உயர்த்தப்பட்டு, திருப்பதியில் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருப்பது நம்மை மெய்சிலிக்க வைக்கும் என்கிறார் டான்ஸ்ரீ நடராஜா.

இதேபோன்று பல லட்சம் வெள்ளி செலவில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன.கோயிலின் முகப்பு, எட்டு தூண்கள் நிறுவப்பட்டு, மாற்றப்பட்டுள்ளது.

நாட்டின் தாய்க்கோயில் என்பதற்கு ஏற்ப கோயில்கள் அனைத்துக்கும் - ஒரு தாய்வீடாக - முன்மாதிரியாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திகழவேண்டும் என்ற நோக்கில் பல நல்லுள்ளங்களின் ஆதரவினால் பெரும் பொருள் செலவில் ஆலயத்தின் திருப்பணி வெற்றிகரமாக நிறைவு பெற்று, வரும் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது கும்பாபிஷேகத்தை காணவிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிடுகிறார்.
இந்த நன்னீராட்டு பெருவிழாவில் மலேசியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேவஸ்தானத்தின் தலைவர் என்ற முறையில் டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

Related News