மலேசியாவின் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு கூட்டரசு பிரதேசத்தில் நடைமுறையிலுள்ள, பிள்ளைகளை ஒருதரப்பாக இஸ்லாமிய மதத்திற்கு, மதமாற்றம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாமிய சட்டங்களின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து, பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி உட்பட 14 பேர் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இணையம் வழியாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதி டத்தோ அலிசா சுலைமான், இச்சட்டங்களால் மனுதாரர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தச் சட்டங்களுக்கு எதிராக வழக்காட அவர்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த கூட்டு மனுவில், ஜொகூர், பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான், பேரா, மலாக்கா மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகியவற்றின் இஸ்லாமிய சட்டப்பிரிவுகள், கூட்டரசு அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவு, 4 ஆவது உட் பிரிவுக்கு முரணானவை என்பதால் அந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என இந்திராகாந்தி உட்பபட 14 மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் மதத்தை இரு பெற்றோர்களும் இணைந்தே தீர்மானிக்க வேண்டும் என்ற 2018-ஆம் ஆண்டின் இந்திரா காந்தி வழக்கின் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பை இந்த மாநில சட்டங்கள் மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். இருப்பினும், பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் கூட, இந்த விவகாரத்தில் தலையிட மனுதாரர்களுக்குப் போதிய சட்டப்பூர்வ உரிமை இல்லை எனக் கூறி நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.








