2026ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியச் செலவு சுமார் 4000 கோடி ரிங்கிட்டை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதுள்ள மானியங்களைக் குறைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என துணை நிதி அமைச்சர் லியூ சின் தொங் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அரசின் நிதிச் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதால், தற்போதைக்கு நிதி முன்னறிவிப்புகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அக்டோபரில், குறிப்பாக மேற்கு ஆசியாவின் நிலவரத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் டேவான் ரக்யாட்டில் தெரிவித்தார்.
தற்போதைய சந்தை விலைகள் தொடர்ந்தால், 2026ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியச் செலவு சுமார் 4000 கோடி ரிங்கிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மேற்கு ஆசிய நெருக்கடியின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்றும் லியூ சின் தொங் கூறினார்.
மேலும், ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென் என்ற விலையில் தொடர்வதை புடி மதானி திட்டம் உறுதிசெய்வதாகவும், தற்போதுள்ள எந்த மானியமும் குறைக்கப்படமாட்டாது என்பதே அரசின் தற்போதைய நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.








