தன் உடலில் போதைப்பொருளைச் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லான்ஸ் கோப்ரல் தகுதியைக் கொண்ட முகமது ஐசட் சம்லி என்ற போலீஸ் அதிகாரி ஈப்போ மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜொகூர், செகாமட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 26 வயதுடைய அவர், மேஜிஸ்ட்ரேட் எஸ். புனிதா முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். தாமான் ஈப்போ, ஜாலான் கேனிங் எஸ்டேட், விஸ்மா வோலில் உள்ள கிராண்ட் ஓ.சி எஸ்டிஎன் பிஎச்டி, வி.ஐ.பி அறை 1 என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை 5.04 மணியளவில், கெட்டமின் மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகிய போதைப்பொருள்களைத் தன் உடலில் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் மீது 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அந்தச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமது சுல்கர்னைன் வான் அஸ்மிரா 4,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தேசிய சட்ட உதவி அறவாரியத்தின் வழக்கறிஞர் நூர் நாத்ரா பதருதின் குறைந்தபட்ச ஜாமீனை கோரினார். நீதிமன்றம் ஒரு ஜாமீன்தாரருடன் 2,000 ரிங்கிட் பிணையில் செல்ல அவரை அனுமதித்ததுடன், அடுத்த விசாரணைத் தேதியை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.








