- மலேசிய வழக்கறிஞர் மன்றம் சாடியது
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனைக் காலத்தை குறைத்து இருக்கும் மன்னிப்பு வாரியத்தின் முடிவு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது. நாட்டின் நீதி, சூறையாடப்பட்டு விட்டது என்று வழக்கறிஞர் மன்றம் வர்ணித்துள்ளது.
மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவினால் பொதுமக்களிடம் லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அது குறித்து பேசுவதற்கும் ஒற்றுமை அரசாங்கம் தனது தார்மீக கடப்பாட்டையும், தகுதியையும் இழந்து விட்டது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் Karen Cheah வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நியாயமான விஷயங்களுக்கு கருணை காட்ட வேண்டும், பரிதாபப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அந்த கருணை, நீதியை சூறையாடுவதாக இருக்கக்கூடாது என்பதும் உண்மைதான் என்று Karen Cheah வர்ணித்தார்.
லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதத்தையும் மன்னிப்பு வாரியம் குறைத்துள்ளது. ஆனால், ஒரு நாட்டின் தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர் தான் சார்ந்துள்ள நாட்டிற்கு எதிராக கடும் குற்றங்களை புரிந்துள்ளார் என்பதற்காக நீதியின் முன்நிறுத்தப்பட்டார்.
நஜிப்பிற்கு எதிரான வழக்கும், தீர்ப்பும் அனைத்து மட்டங்களிலும் நான்கு ஆண்டுகளாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு, ஆராயப்பட்டு, துல்லியமாக கண்டறியப்பட்டப் பின்னரே நஜீப்பிற்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டதை எந்தவொரு தரப்பும் மறந்து விடக்கூடாது என்று சியா கேட்டுக்கெண்டார்.
நஜீப் செய்த குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை நீதித்துறையால் வழங்கப்படுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கு நீதித்துறை அதிக நேரம் செலவிட்டுள்ளது. மக்களின் வரிப்பணமும் பெரியளவில் விரயமாகியது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நாட்டின் நீதித்துறையின் உச்சப்பீடமான கூட்டரசு நீதிமன்றம், நஜீப்பிற்கு எதிரான தண்டனையை உறுதி செய்தது மூலம் மலேசியாவின் சட்டத்திட்டங்களை மீறியவர்கள் யாராக இருந்தாலும்,அவர்களின் பதவி, அந்தஸ்து என்று எதுவும் பார்க்கப்படாமல் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை மலேசிய நீதிதுறை எடுத்துரைத்தது என்று சியா விளக்கினார்.
"Rule of Law என்ற சட்ட முறைப்படி ஆட்சி செலுத்துதல் என்பதுதான் மலேசியாவின் நிலைப்பாடாகும். அதுவே மலேசியாவின் கடப்பாடாகும் என்ற ஒரு தெளிவான செய்தியை மலேசிய நீதித்துறை அறிவித்து இருந்தது என்று Karen Cheah சுட்டிக்காட்டினார்.








