கெடா , மே 02-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் முதலாளிமார்கள் மனம் இறங்க வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கி வந்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் முதலாளிமார்களை நிர்பந்திக்க வேண்டும் என்று டத்தோ சங்கரன் வலியுறுத்தினார்.
நேற்று மே முதல் தேதி, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கெடா மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கெடா, டேவான் பண்டாரன் கூலிம் மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வில் டத்தோ சங்கரன் தலைமை உரை நிகழ்த்தினார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக நடத்திய போராட்டங்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவையாற்றிய பலரை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ சங்கரன், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகவும், அவர்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காகவும் சங்கம் போராடி வந்திருப்பதை நினைவுக்கூர்ந்தார்.
தோட்டத் தொழிலில் தங்கள் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்கும் முதலாளிமார்கள் அத்தொழிலுக்கு முதுகெலும்பாக விளங்குகின்ற தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொடுப்பதில் பரந்த மனம் இல்லை என்று டத்தோ சங்கரன் உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டார்..
முதலாளிமார்களின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கதாகும் என்று குறிப்பிட்ட டத்தோ சங்கரன், ஒரு காலத்தில் தோட்டத்தொழிலில் அதிகமான இந்தியர்கள் இருந்த வேளையில் சம்பள உயர்வு உட்பட இதர அனுகூலங்களை வழங்குவதில் தயக்கம் காட்டிய முதலாளிமார்களின் இத்தகைய பிடிவாதப் போக்கினால் பலர் தோட்டத் தொழிலைவிட்டு விலகினர் என்பது வரலாறாகும்.

முதலாளிமார்கள் இத்தகைய பிடிவாதப் போக்கை கொண்டிருக்காமல் தோட்டத் தொழிலாளர்களின் நலனை காக்க அவர்களுக்கு சம்பள உயர்வு உட்பட இதர அனுகூலங்களை வழங்குவதற்கு அரசாங்கமும் ஆவணம் செய்ய வேண்டும் என்று டத்தோ சங்கரன் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட கெடா மாநில மனித வளம் மற்றும் சீனர், இந்தியர், சயாமியர், NGO- வினர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் சியா ஜென், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டிய அவசியத்தை தமது உரையில் வலியுறுத்தினார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கெடா மாநில செயலாளர் ஐ. சந்தனசாமியின் வரவேற்புடையுடன் தொடங்கிய தொழிலாளர் தின கொண்டாட்ட நிகழ்வில் சங்கத்திற்கு நற்சேவையை வழங்கிய ஜெராய் தோட்ட முன்னாள் செயலாளர் அர்ஜுணன் காளியப்பன், சுங்காய் டிங்கின் பூசாட் தோட்ட முன்னாள் செயலாளர் குணசேகரன் மாரியப்பன், கோலக்கெட்டில் தோட்ட முன்னாள் தலைவர் ரவி சுப்பிரமணியம், BMR தோட்ட முன்னாள் செயலாளர் மாரிமுத்து நடேசன், Somme தோட்ட முன்னாள் தலைவர் ஹரிகிருஷ்ணன் கோபிந்தன், புக்கிட் ஹிஜாவ் தோட்ட முன்னாள் செயலாளர் நடராஜா கோபால், சுங்காய் உலார் தோட்ட முன்னாள் செயலாளர் பரமசிவம் பச்சையப்பன் ஆகியோர் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்
அந்த 7 நற்சேவையாளர்களுக்கு டத்தோ சங்கரன்,
மாலை அணிவித்து, பொன்னாடைப்போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் கூலிம் மாவட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த ASP வாசு குப்புசாமி, அலோர் ஸ்டார் தொழிலியல் உறவு உதவி இயக்குநர் திரு சம்சுல், சங்கத்தின் துணைத் தலைவர் T. வீரன், நிதிச் செயலாளர் S. நேமிநாதன், கெடா மாநில தலைவர் K. கணேசன், கிளந்தான் மாநில செயலாளர் முகமது சாட் நின் யூசோப், கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த B.K. காளிதாஸ், கூலிம் சொக்சோ அதிகாரிகளான திருமதி K. ஜெயந்தி, P. குணாலி மற்றும் சங்கத்தின் கெடா, பெர்லிஸ் பினாங்கு மாநிலங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.








