நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட B40, M40 வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருமானத்திற்கு அரசாங்கம் விலக்களிப்பு சலுகையை வழங்க வேண்டும் என்று மலேசிய சமூக பாதுகாப்பு சந்தாதாரர்களின் ஆலோசனை சேவை சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
60 வயதை கடந்த பணி ஓய்வுப்பெற்ற தொழிலாளர் ஒருவர், தொடர்ந்து வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.
அதேவேளையில் தொழிலாளர சேமநிதி வாரியமான EPF.பில் அவரின் தரப்பில் முதலாளிமார்கள் செலுத்த வேண்டிய EPF சந்தாப் பண விகிதமும் 4 விழுக்காடாக குறைக்கப்பட்டு விடுவதாக மலேசிய சமூக பாதுகாப்பு சந்தாதாரர்களின் ஆலோசனை சேவை சங்கத்தின் தேசியத் தலைவர் J. Soloman தெரிவித்தார்.
பணி ஓய்வுப்பெற்ற 60 வயதை கடந்த தொழிலாளர் ஒருவர் குறிப்பாக B40, M40 வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர், சொக்சோ பாதுகாப்பு இல்லாமலும், EPF சந்தா விகிதம் குறைக்கப்பட்ட நிலையிலும் / தொடர்ந்து தனது வாழ்வாதாரத்தை சமாளிப்பதற்கு அரசாங்கம் ஏற்புடைய நியாயமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று சோலமன் கேட்டுக்கொண்டார்.
காரணம், கோவிட் 19 நோய்த் தொற்று தாக்கத்திற்கு பிறகு குடும்ப பொருளாதாரத்தை சீர்படுத்துவதில் பலர், இன்னமும் நெருக்கடியும், சிக்கலையும் எதிர்நோக்கிய நிலையில் அவர்களின் வாழ்க்கையே பெரும் போராட்டமாக இருக்கின்றன.
இந்நிலையில் 60 வயதை கடந்த B40, M40 வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு வருமான வரி விலக்களிப்பை அரசாங்கம் வழங்குமானால் அவர்களின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்க முடியும் என்று சோலமன் பரிந்துரை செய்துள்ளார். .








