பெட்டாலிங் ஜெயா, ஜூன் 04-
பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு தண்டனையை வழங்கும் விதமாக 3 மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக புகாரளிக்க வேண்டுமென, மனித உரிமை ஆணையம் – SUHAKAM வலியுறுத்தியுள்ளது.
அந்த புகாருடன் போதிய ஆதாரங்கள் வழங்கப்பட்டால், தங்கள் தரப்பில் ஆக்கப்பூர்வமான விசாரணையை மேற்கொள்ள அது பெரிதும் உதவும் என அவ்வாணையம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே, போலீஸின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து SUHAKAM அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு கேள்வி கேட்டு கடிதத்தை அனுப்ப முடியும்.
ஆயினும், அவ்விவகாரத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதை உறுதிபடுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை.
இருந்த போதிலும், சில சந்தர்ப்பங்களில் தங்களது பரிந்துரைகளை ஏற்று, அமலாக்கத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக SUHAKAM கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அம்பாங்-ங்கிலுள்ள ஓர் ஆரம்ப்பள்ளியின் திடலில், 3 மணி நேரம் திடலில் நிற்கவைக்கப்பட்ட 5ஆம் ஆண்டு ஆண் மாணவர், வெப்பவாத தாக்குதலுக்கு இலக்கானதால், AMPANG மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நரம்பியல் பாதிப்புக்கு இலக்கான அம்மாணவர், உடற்பேறு குறைந்தவர் என்ற நிலைக்கு ஆளானதாக, அவரது பெற்றோர் போலிசில் புகார் அளித்தனர்.
அச்சம்பவம் குறித்து SUHAKAM தாமாகவே முன்வந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அதன் முன்னாள் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் நேற்று வலியுறுத்தியிருந்தார்.








