ஜோகூர் மாநிலம் சிகாமட் மருத்துவமனை உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது என சுகாதார அமைச்சர் துல்கிஃப்லி அகமது உறுதியளித்துள்ளார்.
சிகாமட் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நிலைமையானது, சேவை அழுத்தங்களால் உருவானது என்றும், மாறாக அங்கு எந்தவொரு சேவையும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், நோயாளிகளுக்கான சிகிச்சை இடையூறு இல்லாமல் தொடர்வதை உறுதி செய்ய சுகாதார அமைச்சு சிறப்பு நெருக்கடி மேலாண்மை நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளதாகவும் துல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் இத்தகைய சூழ்நிலைகளின் போது, அங்கு உள்நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள் என்றும், வெளிநோயாளிகள் அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளையில், நோயாளிகளின் சிகிச்சையில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, ஜோகூர் சிகாமட் மருத்துவமனை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் ஒன்றை அம்மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் மொக்தார் புங்குட் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








