கோல கங்சாரில் நகைக்கடை ஒன்றின் முன்புறம் நின்று கொண்டு இருந்த காருக்குள் இருந்து 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இக் கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் மூன்று சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர்.
20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் கொள்ளை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக கோலகங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஓமார் பக்தியார் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் ஷா ஆலாமில் ஓர் இடத்தில் அந்த மூன்று சந்தேகப்பேர்வழிகளும் பிடிபட்டனர். அந்த மூவரும் இன்று கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் நவம்பர் 13 ஆம் தேதி திங்கட்கிழமை வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றதாக ஏசிபி ஓமார் பக்தியார் குறிப்பிட்டார்.
நேற்று காலை 11.22 மணியளவில் கோலகங்சாரில் நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை ஒப்படைப்பதற்காக காரில் வந்து இறங்கிய இரு தங்க விற்பனையாளர்களை மடக்கிய கும்பல் ஒன்று, பாராங்கத்தி, சுத்தியலைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
சுமார் 30 வயதுடைய அக்கடையின் பணியாளர் என்று நம்பப்படும் ஒருவர் காரிலிருந்து கீழே இறங்கியதும் நடத்தப்பட்ட இந்த கொள்ளை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் வேட்டையில் அந்த மூவரும் ஷா ஆலாமில் பிடிபட்டதாக ஏசிபி ஓமார் பக்தியார் குறிப்பிட்டார்.








