ஜோகூர், கூலாய், லிங்காரான் புலாத்தான் பெர்சியாரான் இந்தாப்புரா– வில் , கார் மீது டொயோட்டா வெல்ஃபையர் வாகனம் மோதியதில் 17 வயது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலுடன் தொடர்புடையதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூலாயில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணும் நான்கு நண்பர்களும் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற வெல்ஃபையர் வாகனம் அவர்களைப் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சாலை வட்டத்தில் அந்த வாகனம் காரில் மோதியதால், முன்பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் வெளியே தூக்கி வீசப்பட்டார். அதன்பிறகு அந்த வாகனம் அவர் மீது மீண்டும் மோதியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதலில் விபத்தாக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு, 13 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 15 வயது ஒரு பெண்ணும் அடங்குகிறார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு போதைப்பொருள் சோதனை எதிர்மறையாக வந்துள்ள நிலையில், அனைவரும் செப்டம்பர் 3 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








