சொத்து விவரங்களை அறிவிக்கக்கோரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM வழங்கிய நோட்டீஸ் அறிவிப்பின் நிபந்தனைகளை பின்பற்றத் தவறியதாக முன்னாள் நிதி அமைச்சரும், துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பருமான துன் டாயிம் சைனுடின் மனைவி தோ பொவான் நய்மா காலிட் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் எஸ்பிஆர்எம் சட்டம் 32 ஆவது பிரிவின் கீழ் டாயிமின் மனைவி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
தனது சொத்த விரங்களை அறிவிக்கும் விவகாரத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி டாயிமின் மனைவி நய்மா காலிட், கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் உள்ள தனக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறிவிட்டதாக 67 வயதான அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாடை மறுத்து டாயிமின் மனைவி விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி அசுரா அல்வி அனுமதித்தார்.
அதேவேளையில் அந்த முன்னாள் நிதி அமைச்சரின் மனைவியின் அனைத்துலக கடப்பிதழை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.








