மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 'கார்ப்பரேட் மாஃபியா' விவகாரம் குறித்த விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு ஜசெக மகளிர் பிரிவின் சட்டப் பிரிவுத் தலைவர் சங்கீத் கவுர் தியோ வலியுறுத்தியுள்ளார்.
புளூம்பெர்க் ஊடகம் எழுப்பியுள்ள இக்குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும், இந்த விவகாரம் இப்போது சத்தமில்லாமல் மூடிமறைக்கப்படுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்பிஆர்எம் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி பங்குரிமை கொண்டிருந்தது தொடர்பான சர்ச்சையை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கை, இன்னும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் சங்கீத் கவுர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, தனக்கு எதிராக அசாம் பாக்கி குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்ததாக வர்த்தகர்ஆல்பர்ட் டெய் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான போலீஸ் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் நேற்று அறிவித்து இருந்தது தொடர்பில் சங்கீத் மேற்கண்ட கேள்வியை முன்வைத்தார்.








