தொண்டூழிய போலீஸ்காரர் என்று நம்பப்படும் பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று காலை 11.40 மணியளவில் பகாங், காராம்,புக்கிட் டின்டிங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பைப் பெற்ற போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்த போது 33 வயது மதிக்கத்தக்க அந்த குடும்ப மாது தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் சைஹாம் முஹமாட் காஹார் தெரிவித்தார்.
அரச மலேசியப் போலீஸ் படையில் அந்தப் பெண் தொண்டூழிய போலீஸ்காரராக சேவையாற்றி வந்துள்ளார். அவருக்கு 42 வயது கணவரும், நான்கு பிள்ளைகளும் உள்ளனர். சம்பவம் நிகழும் போது வீட்டில் மூன்று வயது மகன் இருந்த வேளையில் இதர மூன்றுப் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று விட்டதாக அறியப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் பெந்தோங் மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ள வேளையில் இச்சம்பவம் குறித்து தாங்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக சுபெரிந்தென்டன் சைஹாம் மேலும் கூறினார்.







