மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்ய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டிலேயே விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது இந்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
இதனையடுத்து, எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாலிம் அமான், இந்த வழக்கை உடனடியாக மறுபரிசீலனை செய்ய சிறப்புக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படாததால் வழக்கு முடிக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆணையத்தின் நேர்மையைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக இன்று சனிக்கிழமை எஸ்பிஆர்எம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








