மடானி 2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளுக்காக 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்தியச் சமுதாயமும் அதன் பலன்களைப் பெறும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியச் சமுதாயத்தின் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட், தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா மூலம் இந்தியத் தொழில்முனைவோருக்கு 150 மில்லியன் ரிங்கிட், தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் என மொத்தம் 350 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருக்குறளின் 731-வது குறளை மேற்கோள் காட்டியதையும் ரமணன் வெகுவாகப் பாராட்டினார்.
அதேவேளையில், கல்வித் துறையில் தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கான 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, குளுவாங்கில் உள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைப்பு, மாணவர்களுக்கான 200 ரிங்கிட் பள்ளி தொடக்க உதவி மற்றும் படிவம் ஆறு மாணவர்களுக்கான 2,500 ரிங்கிட் வாழ்வாதார உதவி ஆகியவை வரவேற்கத்தக்கவை என்றும் ரமணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மித்ரா மூலம் கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வலுவூட்டல் திட்டங்கள் விரிவடைவதுடன், தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியாவின் நிதியுதவிகள் சிறு வணிகர்கள், அங்காடி வியாபாரிகள், பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்குப் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளையில், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய இளைஞர்களும் உயர் வருமானம் ஈட்டும் திறன்மிக்க பணியாளர்களாக உருவாக முடியும் எனறும் ரமணன் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, 2027 ஜூன் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 2,000 ரிங்கிட்டாக உயர்த்துவது, பகுதி திறன் பெற்ற பணியாளர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான 2,500 ரிங்கிட் ஊதிய அளவுகோல், கிக் தொழிலாளர்களுக்காக அரசாங்கமும் கிராப் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் 160 மில்லியன் ரிங்கிட் திட்டம் ஆகியவை தொழிலாளர்களின் வருமானத்தை மேம்படுத்தும் என ரமணன் தெரிவித்துள்ளார்.
மேலும், தகுதியுள்ள சுயதொழில் செய்வோர் மற்றும் 17 துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பெர்கேசோ பங்களிப்பில் 70 விழுக்காடு இணைப் பங்களிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவது சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, வருமான உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு மூலம் இந்தியச் சமுதாயம் உட்பட அனைத்து மலேசியர்களும் பயன்பெறும் வகையில் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்கும் பிரதமர் அன்வாருக்கு ரமணன் தமது நன்றியைத் தெரிவித்தார்.








