மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்யப்படுவாரா? அல்லது தண்டனை விதிக்கப்படுவாரா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் முகாந்திரங்கள் இருப்பதாக கூறி எதிர்வாதம் புரிவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக்கின் இவ்வழக்கில் வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹாமிட் தீர்ப்பை வழங்கவிருக்கிறார்.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பு கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வெற்றி காண்பார்களேயானால் சையிட் சாடிக் விடுதலை செய்யப்படுவார்.
அதேவேளையில் தீர்ப்பு, பிராசிகியூஷனுக்கு சாதகமான இருக்குமானால் 30 வயதுடைய அந்த இளம் எம்.பி.க்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.







