நாட்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் உட்பட சட்டவிரோதமாக பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமை விண்ணப்பத்திற்கான பிரச்னையை தீர்ப்பதற்கு உள்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதில் பதிவு செய்யப்படாத திருமணத்தின் கீழ் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதுடன், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் அலட்சிய போக்கினாலும் தவறுகளினாலும் குடியுரிமை பெறுவதில் அவர்களின் பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail கூறினார்.
குடியுரிமை பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 14,000 மட்டுமே இருந்த வேளை, இவ்வாண்டு 15,000 ஆக அதிகரித்து இருப்பதாக Saifuddin Nasution அறிவித்தார்.மேலும், வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, வருகின்ற ஜுலை 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் Sungai Bakap சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்து வேட்பாளராக களமிறங்கும் Dr. Joohari Ariffin வெற்றி பெற்றால், Sungai Bakap குடியிருப்பாளர்கள் குறிப்பாக, இந்திய சமூகத்தினர் எதிர் கொண்டு வரும் குடியுரிமை பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்க பெறும் என்று Saifuddin Nasution உறுதியளித்தார்.
இன்று பினாங்கு, Dewan Serbaguna Sungai Bakap - பில் நிகழ்ந்த Sungai Bakap இந்திய சமூகத்தினருடனான நட்புறவு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் செய்தியாளர்களிடம் Saifuddin Nasution இதை தெரிவித்தார்.








