மலேசிய மக்களிடையே இனம், மதம் ரீதியாக பிளவுகளும் பேதங்களுக்கும் ஏற்படுமானால் நாடு வளர்ச்சி காண்பது மிக கடினம் என்று கூலிம் மாவட்ட அதிகாரியும் கூலிம் நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரியுமான டாக்டர் ஹாஜி நாட்ஸ்மான் பின் முஸ்தஃபா தெரிவித்தார்.
மூவினம் மக்களிடைய ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டால் மட்டுமே பல்வேறு வழிகளில் நாடு முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மக்களிடையே ஒருமைப்பாட்டை விதைப்பது மூலமே ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்களை செம்மையுற மேம்படுத்த முடியும் என்று டாக்டர் ஹாஜி நட்ஸ்மான் குறிப்பிட்டார்.கடந்த சனிக்கிழமை கெடா, பாடாங் செராய், சி மார்ட் பேராங்காடியின் முன்புறம் கூலிம் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. பல அரசாங்க இலாகாக்களின் ஆதரவுடன் கூலிம் நகராண்மைக் கழகம் இணைந்து காலையிலிருந்து மாலை வரை பல போட்டி விளையாட்டுகளுடன் மலேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு வருகைத்தந்த டாக்டர் ஹாஜி நட்ஸ்மான் 2023 ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டத்தை பலூன்களுடன் கட்டப்பட்ட ஜாலோர் கெமிலாங் கொடியை ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
டாக்டர் ஹாஜி நட்ஸ்மான் மேலும் கூறுகையில் நாம் 60 வது மலேசிய தினத்தைக் கொண்டாடுகின்றோம் அப்படியென்றால், நாடு அதன் இலக்கை நோக்கி பயணிக்கிறது. இந்த சுபிட்சமிக்க நாளில் தேசிய நன்னெறி கோட்பாட்டிற்கு ஏற்ப ஒற்றுமை உணர்வை மக்கள் உயிர் மூச்சாக கொள்வதற்கு உறுதி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கெடா மாநிலத்தில் வளர்ச்சியின் பிரவகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் கூலிம், வரும் 2035 ஆண்டில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்குரிய ஒரு மாவட்டமாக உருமாற்றம்க காண்பதற்கான இலக்கை கொண்டுள்ளது. அந்த வளர்ச்சிக்கேற்றவாறு இம்மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவத்தற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவது கூலிம் நகராண்மை கழகத்தின் கடமையாகும் என்று டாக்டர் ஹாஜி நட்ஸ்மான் தமது உரையில் தெரிவித்தார்.








