இந்தியர்களின் சமூகவியல் பொருளாதாரத்தை முன்னிறுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களை செம்மையுற அமல்படுத்தி வரும் இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா , இன்று 3 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஆறு திட்டங்களை அறிவித்து, அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் மித்ரா, அத்திட்டங்களுக்காக இதுவரையில் 8 கோடியே 99 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய சமூகம் குறிப்பாக வசதி குறைந்த அடிதட்டு மக்கள் பயன் அடையும் வகையில் மேலும் மூன்று புதிய திட்டங்களை மித்ராவின் சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் அறிவித்துள்ளார்.
இந்திய குடும்ப உறுப்பினர்களிடையே வறிய நிலையை போக்கும் திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே STEM என்ற அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மீதான திறனை வளப்படுத்தும் திட்டம் மற்றும் இந்திய சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மித்ராவின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் திட்டம் ஆகியவையே அந்த மூன்று புதிய திட்டங்களாகும் என்று டத்தோ ரமணன் தெரிவித்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் மித்ரா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ரமணன் இதனை தெரிவித்தார்.
வறிய நிலையில் உள்ள இந்திய குடும்பங்களின் உறுப்பினர்கள் மத்தியில் ஏழ்மையை துடைத்தொழிக்கும் வகையில் ஏ.ஐ.ஆர். எனும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவுக்கு ஏற்ப இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
பிரதமர்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக கோலாலம்பூரில் மிக வறிய நிலையில் உள்ள இந்திய சமூகத்தின் மீது கவனம் செலுத்தப்படும். இ-காசி அமைப்பின் மூலம் 1,800 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் தனிநபர் வருமானம் 339 வெள்ளியை விட குறைவாக உள்ளது. அவர்களின் வறுமையைப் போக்கும் இத் திட்டத்திற்கு 82 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இரண்டாவது திட்டமாக, தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவி யில், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என STEM கல்வித்திறன்களை வளப்படுத்துவதாகும். இத்திட்டத்திற்கு 4 ஆம், 5 ஆம், 6 ஆம் ஆண்டுகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்களை இலக்காக கொண்டு அவர்கள் STEM கல்வி தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.
தவிர இந்திய சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மித்ராவின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆயிரம் பேருக்கு 5 ஆயிரம் வெள்ளிக்கு மேற்போகாத உபகரணங்கள் வழங்கப்படும். மாநில அளவிலான வர்த்தக சங்கங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் மித்ராவின் இத்திட்டத்திற்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் மூன்று புதிய திட்டங்களை இன்று அறிவித்தார்.








