கோலாலம்பூர், ஜூன் 12-
பகாங்-ங்கில் அண்மையில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் தாக்கம் இன்னும் மறையாத நிலையில், நாட்டில் மேலுமொரு பேருந்தை உட்படுத்திய விபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில், கோலாலம்பூரை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்,ஜாலான் டூத்தா டோல் கட்டண சாவடிக்கு அருகில், விரைவு பேருந்தை உட்படுத்திய விபத்து நிகழ்ந்தது.
காலை மணி 6.17 அளவில் அவசர அழைப்பை பெற்றதை அடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த மெஞ்சலாரா தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் விபத்தில் சிக்குண்ட பேருந்து ஓட்டுநர் உள்பட எழுவரை மீட்டனர்.
சிராய்ப்பு காயங்களுக்கு இலக்காகியிருந்த அவர்கள் அனைவரும் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அந்த விரைவு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாக, தீயணைப்பு மீட்பு துறையின் மூத்த அதிகாரி முகமது யூஸ்ரி அஜீஸ் கூறினார்.








