நஷ்டத்தில் இயங்கும் தாபோங் ஹாஜி நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 13 மாத சம்பளத்தை போனஸாக வழங்கியிருப்பது மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
நெகிரி செம்பிலான், பாரோயில் பள்ளிவாசல் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் , இந்த முறைகேடு தொடர்பான அறிக்கை தன்னை தனிப்பட்ட முறையில் ஆழமாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"சமயத்தை மையமாக கொண்ட ஒரு நிறுவனம், அதனிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திய மலாய்க்காரர்களால் சீரழிக்கப்பட்டு, அவமானத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான துரோகம்" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
நாளை நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், "இது வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான விவகாரம் அல்ல. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும், இதுபோன்ற பிரம்மாண்ட ஊழல்களையும் அலட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக சகித்துக் கொள்ள முடியாது" என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மிக உறுதியாகத் தெரிவித்தார்.








