நேபாளப் பேரிடரில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் சந்திக்க வேண்டும் என Malaysia Solidarity: Families in Hope எனப்படும் மஸ்ஃபி (MASFIH) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் நேபாளப் பிரதமர் பலேந்திரா ஷாவுடன் பேசி, காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களின் கவலைகளைத் தெரிவித்திருப்பதை வரவேற்பதாக மஸ்ஃபி கூறியுள்ளது.
பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் 28 நாட்கள் கடந்துள்ள நிலையில், 55 குடும்பங்கள் தங்களது உறவுகளின் நிலை குறித்த உறுதியான தகவலுக்காகக் காத்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து குடும்பங்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நெருங்கிய உறவினர்களைக் கொண்ட சிறிய குழுவையாவது பிரதமர் சந்திக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், நேபாளத்துடன் மட்டுமின்றி சீனாவுடனான உயர்மட்டத் தொடர்புகளையும் வலுப்படுத்தி, காணாமல் போனவர்களின் நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து வழிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மஸ்ஃபி வலியுறுத்தியுள்ளது.
மஸ்ஃபி அமைப்பின் பேச்சாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் கூறுகையில் குடும்பங்களின் கவலைகளுக்கு பிரதமருடனான நேரடி சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.








