அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, Datuk Dr நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள நெருக்கடி குறித்து கடைப்பிடிக்கும் நிலைப்பாடு, கல்வி அமைச்சின் கொள்கையை அவர் விமர்சித்ததுடன் முரண்படுவதாக பிகேஆர் துணைப் பொதுச் செயலாளர் ஜி. சிவமலர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் சில நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை கட்டாயம் இல்லை என்ற கல்வி அமைச்சின் முடிவை அக்மால் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக் காட்டிய சிவமலர், அந்த விவகாரத்தை இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பயன்படுத்தக்கூடாது என்றார்.
அக்மாலின் கருத்துகள் இரட்டை நிலைப்பாட்டையும், அரசியல் விளம்பரத்துக்காக விவகாரத்தைத் திசைதிருப்புவதையும் காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, பூமிபுத்ரா பங்குரிமைக் கொள்கை பொருளாதார அமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்டது என முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ள நிலையில், கல்வி அமைச்சின் முடிவு குறித்து அமைச்சுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.








