Sep 22, 2026
Thisaigal NewsYouTube
55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு
தற்போதைய செய்திகள்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

Share:

நேபாளப் பேரிடரில் காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேபாளப் பிரதமர் பலேந்திரா ஷாவிடம் இன்று நேரடியாகப் பேசியுள்ளார்.

சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் கவலையையும், தங்களது உறவுகளின் நிலை குறித்த உறுதியான தகவலுக்காக அவர்கள் காத்திருப்பதையும் அன்வார் எடுத்துரைத்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டும், 55 பேரின் நிலை உறுதி செய்யப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டம், நிதி மற்றும் நிர்வாக ரீதியான விவகாரங்களை கையாள உதவும் வகையில் அதிகாரபூர்வ நடைமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இது குறித்து நேபாளப் பிரதமர் பலேந்திரா ஷாவுக்கு அதிகாரபூர்வ கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பேரழிவின் அளவும் அழிவும் சுனாமியைப் போன்றிருப்பதாகவும் பலேந்திரா ஷா தெரிவித்துள்ள நிலையில், கடினமான சூழலிலும் தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என உறுதியளித்துள்ளார்.

55 மலேசியர்களின் குடும்பங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உறுதியான தகவல் கிடைக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News