Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பிற மத பண்டிகைகளைக் கொண்டாடுவதால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை குறையாது:  பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

பிற மத பண்டிகைகளைக் கொண்டாடுவதால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை குறையாது: பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

மாற்று மதத்தினரின் பண்டிகைகளைக் கொண்டாடுவதால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கை எந்த வகையிலும் குறைந்துவிடாது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'மூன்றாவது அனைத்துலக சமயத் தலைவர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனை தெரிவித்தார். இந்த அனைத்துலக மாநாட்டைப் பேராக் மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அமைதியாகவும் சமத்துவத்துடனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு மலேசியா ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கே ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பிரதமர் தமது உரையில் சுட்டிக்காட்னார்.

மலேசிய அரசியலமைப்பின்படி இஸ்லாம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், மலேசியா ஒரு பல்லின மற்றும் பல சமய மக்கள் வாழும் நாடாகும். கடந்த மாதம் நடைபெற்ற வைசாகி கொண்டாட்டம், தைப்பூச முன்னேற்பாடுகள் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பிற மத விழாக்களில் தாம் பெருமையுடன் பங்கேற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வெவ்வேறு மதக் கொண்டாட்டங்களில் பங்கெடுப்பது ஒருவரைச் சிறந்த முஸ்லிமாக இருப்பதிலிருந்தோ அல்லது மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்தோ எப்போதும் தடுக்காது. அமைதியையும் நல்லிணக்கத்தையும் போதிக்கும் ஒரு மார்க்கம், அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மலேசியா இன்று அனுபவித்து வரும் அமைதியும் மத சகிப்புத்தன்மையுமே, நாம் அனைவரும் இணக்கமாக வாழ முடியும் என்பதற்கான தெளிவான சான்றாகும் என்றும் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Related News