நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவாங்கு முனாவீர் மற்றும் நான்கு மாவட்ட உண்டாங் தலைவர்களுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு தற்போது நீதிமன்றம் வரை சென்றடைந்துள்ளது.
சுங்கை உஜோங் முன்னாள் உண்டாங் முபாரக் தோஹக், தன்னை பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மூன்று உண்டாங்களுடன் சேர்ந்து சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஏப்ரல் 17 -ஆம் தேதி நடைபெற்ற மாநில நீதி மற்றும் உண்டாங் பேரவை கூட்டத்தின் பதிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.
அக்கூட்டத்தில் தான் முபாரக் தோஹக், சுங்கை உஜோங் உண்டாங் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த மனுவில் பேரவையும், நெகிரி செம்பிலான் மாநில அரசும் எதிர் மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் மாநில அரசியல் மற்றும் பாரம்பரிய நிர்வாகத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள், ராஜா நோராஸ்லியும் பேரவையும், கூட்டக் குறிப்புகளை ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
இம்மனுவானது, வரும் மே 13 -ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், யாங் டி-பெர்துவான் பெசார் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக முபாரக் உள்ளிட நான்கு மாவட்ட உண்டாங் தலைவர்கள் அறிவித்ததையடுத்து, இவ்விவகாரமானது விஸ்வரூபமெடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி, நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹாருன்க்கு எதிராக 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை மீட்டுக் கொண்டதாக அறிவித்தனர்.
உண்டாங் விவகாரத்தில் மாநில மந்திரி பெசார் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இம்முடிவை எடுத்ததாக அவர்கள் அறிவித்தனர்.








