ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது, வேட்பாளர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்குகள் உருவாக்கப்பட்டு தவறான தகவல்கள் பரப்பப்படும் டிஜிட்டல் சதி முயற்சிகள் நடைபெறக்கூடும் என்பதால், வாக்காளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.
மேலும், இத்தகைய போலி கணக்குகள் மூலம் தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சிக் கொடிகள் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரப் பதாகைகள் சேதப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் ஏமாற்றமளிப்பதாகவும், இத்தகைய செயல்கள் ஆரோக்கியமான தேர்தல் பிரசாரத்துக்கு முரணான, காலாவதியான பிரசார உத்திகள் என்றும் ஃபஹ்மி ஃபாட்சில் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், பொய்யான தகவல்கள் அல்லது தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை உள்ளடக்கிய பதிவுகளில் எத்தனை பதிவுகள் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த எம்சிஎம்சியின் அண்மைய விவரங்கள் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தல் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவது தங்களது சமூக வழிகாட்டி விதிமுறைகளை மீறுவதாக அனைத்து சமூக ஊடகத் தளங்களும் தெரிவித்துள்ளதையும் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் சுட்டிக் காட்டியுள்ளார்.








