Jul 18, 2026
Thisaigal NewsYouTube
போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்
தற்போதைய செய்திகள்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

Share:

நாடாளுமன்றத்தில் வணிகப் போட்டிகள் தொடர்பான ஒரு புதிய சட்டத் திருத்த மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு அடுத்த கட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, விதிகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 40 விழுக்காடு வரை தள்ளுபடி கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை முறை சரியானதுதான் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமட் அலி இதனை ஆதரித்துப் பேசியுள்ளார்.

அதாவது, தப்பு செய்யும் நிறுவனங்கள் தங்களது தவறை ஒப்புக்கொண்டு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தால், அவர்களுக்கு அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தள்ளுபடி தந்து வழக்கை விரைவாக முடிக்க இந்த முறை உதவும் என்று அவர் விளக்கியுள்ளார்.

இந்தத் தள்ளுபடி அனைத்து நிறுவனங்களுக்கும் தானாகவே கிடைக்காது என்றும், நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தே ஆணையம் கூட்டு முடிவாக எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த புதிய சட்டத்தில் பெரிய நிறுவனங்களின் இணைப்பைக் கட்டுப்படுத்தும் முறை ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு விளக்கமளித்த அமைச்சர், தற்போது ஆணையத்தின் அமலாக்கத்திறனை மேம்படுத்துவதே முன்னுரிமை என்றும், அந்த முறை 13ஆவது மலேசியத் திட்டக் காலத்தில் சேர்க்கப்படும் என்றும் கூறினார். மேலும், ஏற்கனவே இருக்கும் தகவல் கொடுப்பவர் பாதுகாப்புச் சட்டம் குற்றவியல் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்துவதால், வணிகச் சிவில் குற்றங்களை உள்ளடக்கிய இந்தச் சட்டத்தில் புதிய பாதுகாப்புப் பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related News