மக்களின் நலன் மற்றும் மாநில நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்ய, ஜோகூர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.
ஜோகூர் மாநில பிகேஆர் துணைத் தலைவர் டாக்டர் மஸ்லி மாலிக் இன்று செத்தியா இண்டா பகுதியில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இதனைத் தெரிவித்தார். அரசியல் ரீதியாகக் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், மக்களின் தேவைகளுக்கும் ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் பக்காத்தான் ஹராப்பான் எப்போதும் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பானுடன் எவ்விதக் கூட்டணியும் கிடையாது என்றும், தங்களின் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம் என்றும் பெரிகாத்தான் நேஷனல் ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹ்ருடின் ஜமால் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், பக்காத்தான் ஹராப்பானின் இந்த நெகிழ்வுத்தன்மை வாய்ந்த அறிவிப்பு ஜோகூர் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.








