இந்தியர்கள் சம்பந்தப்பட்ட ஜவுளியகம், முடித்திருத்தும் நிலையம், நகைக்கடை ஆகிய 3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை மனித வள அமைச்சராக இருந்த போது அகற்ற முடியாத டத்தோஸ்ரீ சரவணனா? இப்போது அந்த தடையை அகற்றுவதற்கு முழு முயற்சியை மேற்கொண்டார் என்று தொழில் முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த மூன்று துறைகளுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டு காலமாக இருந்த தடையை அகற்ற முடியாத சரவணனும், மஇகாவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த திங்கட்கிழமை பிரிக்பீல்ட்ஸிற்கு வந்த போது விடுத்த கோரிக்கையினால் இந்த தடை அகற்றப்பட்டதா? என்றும் சரஸ்வதி கந்தசாமி வினவினார்.
மூன்று துறைகளுக்கும் தடை அகற்றப்பட்டதற்கு முழு முயற்சி மேற்கொண்டவர் சரவணன் என்றும், அவர்தான் பிரதமரிடம் பேசினார் என்றும், இவ்விவகாரத்தில் தாம் மலிவான விளம்பரத்தை தேடுவதாகவும் என்று தமது பெயரை குறிப்பிட்டு நேரடியாக சாடிவரும் மஇகா தகவல் பிரிவுக்கு சரஸ்வதி கந்தசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கட்டமானம், விவசாயம் மற்றும் தோட்டத்தொழில் துறை ஆகிய துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தளர்வு வழங்கப்படுவது தொடர்பில் முதல் முறையாக ஒரு குழு அமைக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாக சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் சிவகுமாரும், தாமும் ஜவுளியகம், முடித்திருத்தும் நிலையம், நகைக்கடை ஆகிய 3 துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக்கோரி, முழு வீச்சில் போராடி, அதற்கான முன்னெடுப்பை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததாக சரஸ்வதி கந்தசாமி நேற்று பிரத்தியேகமாக வெளியிட்டுள்ள 9 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொலியில் நடந்த உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார்.








