இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோக்ஷகானா வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவர் விடுதலையான நிலையில் மற்றொரு வழக்கில் உடனடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவரது தலைமயில் தான் அந்த அணி 50 ஓவர் உலககோப்பையை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் கூட்டணி ஆட்சியை அமைத்து பிரதமராக பொறுப்பேற்றார். இதற்கிடையே தான் அவருக்கு ஆதரவு அளித்த கட்சியினர் அதனை வாபஸ் பெற்றனர். இதையடுத்து கடந்த ஆண்டு இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் பிரதமர் பதவியை இழந்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். தற்போது அங்கு பதவிக்காலம் முடியும் 2 நாட்களுக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையே தான் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தது முதல் அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல் உள்பட பல வழக்குகள் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டன. இதில் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்ததாக கூறப்படும் வழக்கில் இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.








