நாட்டில் முதன் முதலாக மாத சம்பளத்தை அமல்படுத்தும்படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து, அதை ஒரு சட்டமாக கொண்டு வர வழி வகுத்தது தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது வரலாறாகும் என்று அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் நினைவுபடுத்தினார்.
ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்களின் மாத சம்பளம உயர்வு பெற வேண்டி தொழிலியல் நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். நாட்டின் மேம்பாட்டிற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விகாரம் தொடர்பான வழக்கில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றுமே விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று டத்தோ ஜி.சங்கரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிப்பாங் பாகான் லாலாங் கடற்கரை பகுதியில் உள்ள சேரி மலேசியா ஹோட்டலில் சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தோட்டத் தலைவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து,நற்சான்றிதழ் வழங்கும் போது டத்தோ ஜி.சங்கரன் இதனை தெரிவித்தார்.
தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்காக நடத்தப்படும் இது போன்ற தலைமத்துவப் பயிற்சி வாயிலாக கிடைக்கக்கூடிய அனுபவங்களை, தாங்கள் சார்ந்த தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் இதர உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது மூலம் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் உரிமை என்ன என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று டத்தோ ஜி. சங்கரன் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வை.தாமாசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மொத்தம் 50 தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து பயன் பெற்றனர். இந்த இரண்டு நாள் பயிற்சியில் பங்கு கொண்டவர்களுக்கு டத்தோ ஜி. சங்கரன் , நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.








