இஸ்ரேல் தொடர்பான பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து ஊழியர்கள் வேலை நீக்கம் குறித்து மனிதவள அமைச்சு இதுவரை புகார் ஏதும் பெறவில்லை என மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில், மலேசியர்கள் ஒன்றிணைந்து இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவான தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெறாததால், பகுதி நேரத் தொழிலாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்படும் கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வருபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இதற்கு முன்னர் கொடுக்கப்பட்டதாகவும், சம்பளம் அல்லது பணியின் அடிப்படையில் அவர்களை சரியாக நிர்வகிக்க இன்னும் சில முதலாளிகள் தவறுவதாகவும் சிவகுமார் கூறினார்.
மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் எனும் நிலை இருக்கக் கூடாது எனக் கூறிய அமைச்சர், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
எனவே சம்பந்தப்பட்ட அனைத்து முதலாளிகளும் முகவர்களும் இதுபோன்ற வேலையைச் செய்வதை நிறுத்த வேண்டும். வேலையை உறுதிப்படுத்தாமல் மலேசியாவுக்குள் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வருவது ஒரு குற்றம் எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சிவக்குமார் கூறினார்.








