சுபாங் விமான நிலையத்திலிருந்து லாவோஸுக்கு 521 கிலோ சியாபு போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட தனியார் விமானத்தை வாடகைக்கு எடுக்க, பிலிப்பைன்ஸ் அரசியல்வாதி ஒருவர் நிதியளித்ததாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த மலேசிய போலீஸ் காத்திருக்கிறது.
இந்த விமானத்தை முன்பதிவு செய்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் கும்பல், லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸுக்குப் போதைப்பொருளைக் கொண்டு செல்ல தனியார் விமானச் சேவையைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.
எனினும், தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவருக்குக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அந்நாட்டு அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.








