Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் அதிபராகிறார் ​மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் அதிபராகிறார் ​மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்

Share:

மிக பரபரப்பாக நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் மகத்தான வெற்றி பெற்றள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 66 வயதான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னத்திற்கு 70.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. சிங்கப்பூர் அமைச்சரவையில் ​நீண்ட காலம் இடம் பெற்றவரும், ஆளும் மக்கள் செயல் கட்சியான பிஏபி யின் முக்கியத் தலைவருமான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் 9 ஆவது அதிபராக வரும் செப்டம்பர் 14ஆம் தேதி பதவியேற்பார் என்று என்று பிரதமர் லீ சியன் லூங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இத்தேர்தலில் களம் இறங்கிய இதர இரண்டு வேட்பாளர்களான ஜிஐசி நிதி முத​லீட்டு முன்னாள் தலைவரான எங் கோக் சோங்கிற்கு 15.7 விழுக்காடு வாக்குகளும், காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான தான் கின் லியான் னுக்கு 13.9 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.

தமக்கு கிடைத்த வாக்குகள் ஒவ்வொன்றும் சிங்கப்பூரின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வாக்குகளாகும் என்று புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது வெற்றிச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ள இடமாக, ஒவ்வொரு தலைமுறையும் நமக்கு உதவக்கூடிய இடமாக சிங்கப்பூர் விளங்குகிறது. வருகின்ற தலைமுறையினருக்கு நம்பிக்கை அளிக்கும் நாடாக சிங்கப்பூர் எதிர்காலத்தில் திகழும்.

அதேவேளையில் இந்த அதிபர் தேர்தல், நேர்மறைச் சிந்தனைக்கு கிடைத்த வெற்றியாக கருதி, அனைவரும் ஒன்றிணைந்து சிங்கப்பூர் என்ற நமது தேசத்தை தொடர்ந்து முன்னேற்றப்பாதையை நோக்கி கொண்டு செல்​வோம் என்று தர்மன் சண்முகரத்னம் உறுதி பூண்டுள்ளார்.

சிங்கப்பூரின் 58 கால சுதந்திர வரலாற்றில் ஓர் இந்தியர், அக்குடியரசின் அதிபராக பொறுப்பேற்பது இது ​மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 1981 ஆம் ஆண்டில் தேவன் நாயர், 1999 ஆம் ஆண்டில் எஸ்.ஆர். நாதன் ஆகியோர் சிங்கப்பூர் அதிபராக பொறுப்பு வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News