மலேசியாவில் வேலை செய்ய வர விரும்பும் அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு போலீஸ் சோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களின் குற்றப் பின்னணி மற்றும் தனிப்பட்ட விவரங்கள் போலீஸ் படையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முறையின் வழியாகச் சரிபார்க்கப்படும் என மனிதவளத் துணையமைச்சர் டத்தோ ஃபிர்டாவுஸ் அக்பார் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குற்றப் பின்னணி அல்லது சந்தேகத்திற்குரிய பின்புலத்தைக் கொண்டவர்கள் தொடர்பான விவரங்களைக் கண்டறிவதே இந்தச் சோதனையின் நோக்கம் என்றும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மலேசியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் அரசாங்கத்தின் அனைத்து நடைமுறைகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








