2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 898 மாணவர்கள் அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தேர்வை எழுத அமைச்சர்கள் வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் செய்திகளையும் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சீடேக் கூறுகையில், மாணவர்கள் தங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் மீது நம்பிக்கை வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், காஜாங்கில் உள்ள எஸ்எம்கே தாமான் ஜஸ்மின் 2 பள்ளிக்குத் திடீர் வருகை தந்து தேர்வு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.
உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர், சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் உள்ளிட்ட அமைச்சர்களும் மாணவர்கள் போதிய ஓய்வு எடுத்து, உடல்நலத்தைப் பேணுவதுடன் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே, தேர்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும் எஸ்பிஎம் என்பது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஒன்றுதான் என்றும், ஒவ்வொரு தேர்வையும் பதற்றமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஎம் எழுத்துத் தேர்வுகள் இன்று தொடங்கி, டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.








