மலேசியாவில் தோன்றி வரும் புதிய அரசியல் கட்சிகளின் வரவை அலட்சியப்படுத்த முடியாது என்றும், அவை தற்போதைய அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவை என்றும் பக்காத்தான் ஹரப்பான் தகவல் தொடர்பு இயக்குனர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
தேசிய தகவல் பரப்பு மையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தச் சூழல் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்றார். வெறும் அரசியல் பேச்சுகளோடு நின்றுவிடாமல், மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலமே மக்கள் ஆதரவைத் தக்கவைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு உதாரணமாக, கோலாலம்பூர் தாமான் ரிம்பா கியாரா பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ரூமா பாஞ்சாங் குடியிருப்பாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசு தீர்வு கண்டதை அவர் சுட்டிக்காட்டினார். சுயநலமின்றி மக்களின் நலனை மட்டுமே சிந்திக்கும் சுத்தமான தலைவர்களையே பொதுமக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








