நேபாளத்தில் சேற்றுப் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள, மலேசியாவின் மூன்றாவது உதவி முன்மொழிவுக்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மலேசியாவின் சிறப்பு பேரிடர் மீட்புக் குழுவான ஸ்மார்ட் குழுவின் தலைவரும், மூத்த தீயணைப்பு அதிகாரியுமான அப்துல் மானாப் சே இசா இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதலில் 50 மீட்புப் பணியாளர்களை அனுப்ப மலேசியா முன்வந்தது.
பின்னர், மீட்பு உபகரணங்களுடன் 25 பேரை அனுப்பும் இரண்டாவது முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், நேபாளத்தில் ஏற்கெனவே போதுமான மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வந்ததால், இந்த இரண்டு முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்டன.
இதனையடுத்து, பிரத்யேக தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் வகையில், 11 ஸ்மார்ட் மீட்புப் பணியாளர்கள், ஒன்பது உயர் திறன் கொண்ட ட்ரோன்கள் மற்றும் சிறப்பு கண்டறிதல் உபகரணங்களை அனுப்பும் மூன்றாவது முன்மொழிவுக்கு நேபாளம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் சேற்றுக்குள் புதைந்துள்ள பகுதிகளில் சிக்கியவர்களைக் கண்டறியவும், நிலப்பரப்பை வானிலிருந்து ஆய்வு செய்யவும் இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக, சேற்றுக்கு அடியில் புதைந்துள்ள கட்டடங்களுக்குள் இருந்து எழும் ஒலிகள் மற்றும் அசைவுகளைக் கண்டறியக்கூடிய சிறப்பு உபகரணங்கள் மீட்புப் பணிகளில் முக்கியப் பங்கு வகித்தன.
கடும் மழை, மாறிய நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்துப் பாதைகள் சேதமடைந்தது போன்ற சவால்களுக்கு மத்தியிலும் மலேசிய மீட்புக் குழுவினர் பணியாற்றினர்.
மேலும் நேபாள ராணுவத்துடன் இணைந்து மூன்று நாட்கள் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், காணாமல் போன மலேசியர்களின் கடைசியாக அறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட தேடுதலில் உயிர் பிழைத்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.
தேடுதல் பணிகளுக்கான வான்வழிப் படங்கள் மற்றும் ட்ரோன் காணொளிகளும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் பகிரப்பட்டன.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் நிலை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, மலேசிய மற்றும் நேபாள அரசுகளின் ஒருங்கிணைப்பை குடும்பத்தினர் பொறுமையுடன் எதிர்பார்க்க வேண்டும் என்றும் ஸ்மார்ட் குழுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








