கோலாலம்பூர், டிசம்பர்.02-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம் இன்று பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமருடன் துணைப்பிரதமர் டத்ய்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்பும் கலந்து கொண்டார்.
இந்த தேசிய நீர்வளக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் மந்திரி பெசார்கள் மற்றும் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
நீர்வள சவால்களை இன்னும் எவ்வாறு முழுமையாக எதிர்கொள்வது என்பது குறித்து அனைத்து மாநிலங்களின் மந்திரி பெசார்களும், முதலமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்தக் கூட்டம் ஒரு முக்கியமானத் தளமாக அமைந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறுகையில், நாட்டின் ஆற்று நீர் மோசமடைவதை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக, தரவு மையத் தொழில் துறையில் மாற்று நீர் ஆதாரங்களை நிர்வகித்தல், கழிவு நீர் மேலாண்மை மீதான சவால்கள் மற்றும் தொழில்துறையினரைத் தயார்படுத்துல், தேசிய நீர் அணைக்கட்டு மையம் ஒன்றை நிறுவுதல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.








