நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி, மீண்டும் ஒரு அரசியல் நிலைத்தன்மையற்ற நிலையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் மத்திய தலைமை மன்ற உறுப்பினருமான ஏ.குமரேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களால், நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சீர்குலைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் அமைந்த பிறகுதான், நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டு, மென்பொருட்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற உன்னதத் துறைகளில் பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும் தற்போதைய நிலைத்தன்மை மிக அவசியமாகும். எனவே, புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளை விடுத்து, நாட்டைப் பொறுப்புடன் வழிநடத்தும் முதிர்ந்த அரசியலே மலேசியாவிற்கு இப்போது தேவை என்று ஏ.குமரேசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.








